தமிழ் சினிமாவுக்கு நிகரான ஆங்கிலப் படங்கள் : கமல்ஹாசன் விருப்பம்


தமிழ் சினிமாவுக்கு நிகரான ஆங்கிலப் படம் என்ற நிலை உருவாக வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் விருப்பம் தெரிவித்தார்.

கார்த்தி, பார்த்திபன், ரீமாசென், ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை - சத்யம் திரையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு டிரைலரை வெளியிட்ட நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், "சினிமாவில் தயாரிப்பாளர்கள் நல்ல படம் எடுக்க வேண்டும் என்ற கனவுகளுடன் வரவேண்டும். பணம் சம்பாதிப்பதற்கு வேறு வியாபாரம் இருக்கிறது. எல்லா வியாபாரங்களிலும் பணம் கிடைக்கும். சில வியாபாரங்களில் மட்டுமே சந்தோஷம் கிடைக்கும். அதற்காக, தயாரிப்பாளர்களை நான் தியாகம் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. கனவுகளுடன் வாருங்கள். இது கலை சார்ந்த வியாபாரம்.
கடவுள்'ஆங்கில படங்களுக்கு இணையாக,' என்று சொல்வதை இனிமேல் விட்டுவிடுங்கள். சினிமாவை, ஹாலிவுட் என்றும், ஹோலிவுட் என்றும் பிரிக்காதீர்கள். சினிமா ஒன்றுதான். அதென்ன ஹாலிவுட்?

தமிழ்ப் படங்களுக்கு நிகரான ஆங்கிலப் படம் என்ற நிலை உருவாக வேண்டும். வெற்றி பெற்ற படம் மாதிரி எடுத்து கொடுங்கள் என தயாரிப்பாளர்கள் வரக் கூடாது. இயக்குநர்களை புதிதாக சிந்திக்க விடுங்கள். அப்போது தான் வித்தியாசமான காட்சிகள் கிடைக்கும். திட்டமிட்டு படம் எடுங்கள். ஒரு படத்துக்கு இரண்டு, மூன்று ஆண்டுகள் தேவையில்லை. அதை திரைக்கதை உருவாக்கத்துக்கு செலவிடுங்கள். ஒரு படத்துக்கு ஒரு ஆண்டே அதிகம் என்ற நிலையை ஏற்படுத்துங்கள்," என்று திரையுலகினருக்கு வேண்டுகோள் விடுத்தார் நடிகர் கமல்ஹாசன்.


செல்வ ராகவன் இயக்கியுள்ள ஆயிரத்தில் ஒருவன் படத்தை ரூ.32 கோடி செலவில் ரவீந்திரன் தயாரித்துள்ளார். இது, 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மகாராஜாவையும், 2009-ல் வாழ்கிற ஒரு இளைஞன், இரண்டு இளம்பெண்களையும் பற்றிய கதை. இப்படம் கடந்த 3 வருடங்களாக தயாரிப்பில் இருந்தது.

இந்நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், கவிஞர் வைரமுத்து, இயக்குனர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வெற்றிமாறன், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ராம்ஜி, நடிகர்கள் பார்த்திபன், சூர்யா, கார்த்தி, நடிகைகள் ரீமாசென், ஆன்ட்ரியா ஆகியோரும் கலந்துகொண்டு பேசினர்.

0 comments:

Post a Comment

Followers