வரப்போகும் புதிய மோட்டார் வாகன சட்டம்


1988-ம் ஆண்டே இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர அரசு முடிவெடுத்து வேலைகளை ஆரம்பித்தது என்றாலும், இப்போதுதான் இந்த நடவடிக்கை இறுதி வடிவத்தைப் பெற்றிருக்கிறது.டிரைவிங் ஸ்கூல் நடத்துவதற்கான அடிப்படைத் தேவைகள், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை, வாகன விபத்தால் பாதிக்கப்படுபவர்கள் அல்லது மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை அதிகரிப்பது, குறிப்பாக அமைப்பு சாராத பணியாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீட்டை உயர்த்துவது, மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட பல விஷயங்கள் இந்தப் புதிய சட்டத்தில் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டார் வாகனச் சட்டத்தில் தற்போதுள்ள அபராதங்களை அதிகரிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. வேகமாக அல்லது அலட்சியமாக வாகனம் ஓட்டுவது மூலம், அடுத்தவருக்கு காயம் அல்லது வாகனத்துக்குச் சேதம் ஏற்படுத்தினால், தற்போது 3,000 முதல் 4,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இது இனிமேல் 10,000 ரூபாயாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விதம் வசூலாகும் தொகையை, அடையாளம் தெரியாத வாகனம் மோதி (Hit and Run) மரணம் அடைபவர்களின் குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் பரிந்துரைக்கப்பட இருக்கிறது.

அதேபோல், ஓவர் ஸ்பீடில் செல்லும் வர்த்தக வாகனங்களான பஸ்கள், கேப்ஸ், லாரிகளுக்கு 1970-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட அபராதத் தொகையே இப்போதும் தொடர்கிறது. அது 2,000 ரூபாயாக அதிகரிக்கப்பட இருக்கிறது. இப்படி பல யூகங்கள் டெல்லி முழுதும் இறக்கை கட்டிப் பறக்கின்றன.

அடுத்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் மோட்டார் வாகனச் சட்டத்தை மாற்றி அமைத்து விட வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. அதற்குள், 'எந்தக் குற்றத்துக்கு என்ன தண்டனை?' என்பது தெளிவாகிவிடும்!

நன்றி மோட்டார் விகடன்

0 comments:

Post a Comment

Followers